ரஜினி வீட்டின் வரவேற்பறையில் இருந்த கொசு பேட் புகைப்படத்தை வைத்து, நிறுவனம் ஒன்று சமூகவலைதளங்களில் மார்க்கெட்டிங் செய்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு போட்டோவை வைத்து என்ன செய்ய முடியும்? என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். இதற்கு உதாரணமாக சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள காந்தாரா படத்தின் இயக்குநரும் நடிகருமான ரிஷப் செட்டி, சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினியை சந்தித்து ஆசி பெற்றார்.

அப்போது ரிஷப்பிற்கு தங்க  சங்கிலியை ரஜினி பரிசாக அளித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் ரிஷப் செட்டி பகிர்ந்திருந்தார். இதனை கண்ட குறும்புக்கார நெட்டிசன் ஒருவர், 'ரஜினி வீட்டின் வரவேற்பறையில் இரண்டு கொசு பேட் இருப்பதை வட்டமிட்டு, சூப்பர் ஸ்டார் வீட்டிலும் நிறைய கொசுத் தொல்லை இருக்கும் போல' என பதிவிட்டிருந்தார்.

இது சமூகவலைதளங்களில் பரவலாக வைரலான நிலையில், இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட டெக் கிளார் டீல்ஸ் என்ற மார்க்கெட்டிங் நிறுவனம், ரஜினி,ரிஷப் செட்டியுடன் இருக்கும் அதே புகைப்படத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில், கொசு பேட் விலை ரூ.749 என பதிவிட்டு, அமேசான் தளத்திற்கான இணைப்பையும் பதிவிட்டது.

இதனை பகிர்ந்திருந்த சினிமா விமர்சகர் பிரசாந்த் என்பவர், 'போயஸ் கார்டனிலேயே மோசமான கொசு தொல்லை இருக்கிறதென்றால், சென்னையில் மற்ற பகுதிகளில் எப்படி இருக்குமென எண்ணி பாருங்கள்' என நகைச்சுவையாக பதிவிட்டிருந்தார்.