உக்ரைன் மீது கடந்த எட்டு மாதங்களாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உலகளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனால் உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளன. உக்ரைனுக்கு அமெரிக்கா நிதி மற்றும் ஆயுத உதவி செய்து வருகின்றன.

இந்நிலையில் பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து சமூக வலைதளத்தில் ஆலோசனை வழங்கி கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.

அதன்படி, ரஷ்யா தன்னுடன் இணைத்து கொண்ட 4 பிராந்தியங்களில் ஐ.நா.‌சபை கண்காணிப்புடன் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்.

அதன் முடிவுகளின்படி போரில் இரு தரப்பும் அமைதியை ஏற்க வேண்டும். கரைமியா மற்றும் டான்பாஸ் பிராந்திய மக்கள் எந்த நாட்டுடன் இருக்க விரும்புகிறார்கள் என ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் எனக்கூறியுள்ளார்.

இதனால், கோபமடைந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில்

உங்களுக்கு எந்த எலான் மஸ்கை பிடிக்கும்.

ரஷ்யா ஆதரவு எலான் மஸ்க்கா?

உக்ரைன் ஆதரவு எலான் மஸ்க்கா? எனக்கூறி பதிலுக்கு அவரும் கருத்துக்கணிப்பு நடத்தி உள்ளார். இதையடுத்து பலரும் எலான் மஸ்க்கை கடுமையாக விமர்சிக்க துவங்கினர்.

இதனையடுத்து அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில்..

பெரும் போர் என்று சொன்னால் உக்ரைன் வெற்றி பெறும் வாய்ப்புகள் மிகவும் குறைவு.

ஏன் என்றால் உக்ரைனைவிட 3 மடங்கு அதிக மக்கள் தொகை கொண்ட நாடு ரஷ்யா. அணு ஆயுத அபாயம், போர் இழப்புகள் இரு தரப்புக்குமே பாதிப்பை தருவதுடன் ஒட்டு மொத்த உலகத்திற்குமே தீங்கை தரும்.

எனவே அமைதி தான் சிறந்த தீர்வு எனக்கூறியுள்ளார்.