சீனாவில் தென் பிராந்தியங்களில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டித் தீர்த்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களில் சிக்கி கிட்டத்தட்ட 5 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தால் 177,600 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 1,729 வீடுகள் அழிந்தன. 27.13 ஹெக்டேர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. சுமார் 250 மில்லியன் டொலருக்கு அதிகமான சொத்து இழப்புகளை ஏற்பட்டுள்ளதாக குவாங்டாங்கின் அவசரகால முகாமைத்து துறை நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

குவாங்டாங் மாகாணத்தில் பெய்த மழையினால் கடுமையான நிலச்சரிவுகள் ஏற்பட்டன. வீதிகளை மேவி வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்கிறது என சீன அரச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தென்மேற்கு குயிசு (Guizhou) மாகாணத்தில் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதால் வீதிகள் அழிந்துள்ளன. கார்கள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதை சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள வீடியோக்களில் காண முடிகிறது.

குவாங்சி, குவாங்டாங் மற்றும் புஜியான் ஆகிய இடங்களில் 1961 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்ச மழைப்பொழிவு பதிவாகியுள்ளது என்று உள்ளூர் வானிலை மையங்கள் தெரிவித்தன.

இந்தப் பகுதிகளில் மே 1 முதல் ஜூன் 15 முதல் 46 நாட்களில் சராசரியாக 621 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளது. இது 2021 ஆம் ஆண்டு முழுவதும் நாடு தழுவிய சராசரியான பெய்த மழைவீழ்ச்சியில் கிட்டத்தட்ட 90% க்கும் அதிகமாகும். 2021 இல் மொத்தம் 672.1 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவானது.

தெற்கு மாகாணங்களான குயிசு (Guizhou), ஜியாங்சி (Jiangxi), அன்ஹுய் (Anhui) , ஜெஜியாங் (Zhejiang) மற்றும் குவாங்சி (Guangxi) ஆகிய பகுதிகளில் அடுத்துவரும் நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும், பின்னர் வடக்கு நோக்கி நகரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.