ஆழ்கடலில், 32 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, 'ஆக்டோபஸ்' வகையைச் சேர்ந்த உயிரினத்தின் படிமத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கடந்த, 1988ல், வட அமெரிக்க நாடான கனடாவில், ஒன்டாரியோ அருங்காட்சியகத்திற்கு அரிய கடல் உயிரின படிமம் பரிசளிக்கப்பட்டது.

இதை அமெரிக்க விஞ்ஞானிகள் கிறிஸ்டோபர் வாலன், நீல் லாண்ட்மேன் சில ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்தனர்.தற்போது இந்த படிமத்தின் ஆய்வறிக்கை, 'நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்' என்ற ஆய்வு இதழில் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அறிவியல் மீது காட்டும் ஆர்வத்தை பாராட்டி 'சிலிப்சிமோபோடி பைடனி' என்ற இந்த படிமத்திற்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இது பற்றி ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அமெரிக்காவில் 'பியர் கல்சு லைம்ஸ்டோன்' பகுதியில் சிலிப்சிமோபோடி பைடனி என்ற 'ஆக்டோபஸ்' இனத்தைச் சேர்ந்த கடல் வாழ் உயிரினத்தின் படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த உயிரினம், 32 கோடி ஆண்டுகளுக்கு முன் ஆழ்கடலில் வசித்துள்ளது. இது, 12 செ.மீ. நீளம், 10 கைகள், இரு புறம் துடுப்புகள், உடலை தாங்கும் முக்கோண வடிவிலான தசை ஆகியவற்றுடன் இருந்துள்ளது.

பூமியின் ஐந்து மிகப் பெரும் அழிவிற்கு பிறகும், சிலிப்சிமோபோடி பைடனி உயிர் வாழ்ந்துள்ளது.

வழக்கமாக இவ்வகை உயிரினங்கள் இறந்தால், உடல் அழுகி விடும். ஆனால், சிலிப்சிமோபோடி பைடனி, ஓடுகள் இன்றி கிடைத்துள்ளது
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.