இன்று முதல் கொவிட் மரணங்கள் அறிவிக்கும் முறையில் சுகாதார அமைச்சகம் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக சுகாதார இயக்குநர் ஜெனரல் ஆஷ்லே ப்ளூம்ஃபீல்ட் தெரிவித்தார்.

இன்றைய ஊடக மாநாட்டில் டாக்டர் ப்ளூம்ஃபீல்ட் இதனை அறிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்..

கொவிட் பரிசோதனையின் போது நேர்மறையான சோதனை முடிவு கிடைத்த 28 நாட்களுக்குள் நபர் இறந்துவிட்டால், இறப்புகள் தானாகவே தெரிவிக்கப்படும், இதே முறையை இங்கிலாந்து உட்பட பல நாடுகள் உலகம் முழுவதும் பயன்படுத்துகின்றன என அவர் தெரிவித்தார்.

மேலும் இறப்புகள் பற்றிய கூடுதல் விவரங்களும் சேர்க்கப்படும் என தெரிவித்தார்.

கொவிட் மரணங்கள் மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றன.

* கொவிட் தொற்று தான் மரணத்திற்கான தெளிவான காரணம் என்ற வகையில் இன்றுவரை   34 இறப்புகள் உள்ளன.

* ஒரு நபர் இறந்தபோது கொவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது, ஆனால் அது மரணத்திற்குக் காரணம் இல்லை (இந்த வகையில் இதுவரை 2 இறப்புகள் உள்ளன).

* ஒரு நபர் இறந்தபோது கொவிட்-19 இருந்தது, ஆனால் அவர் இறந்ததற்கான காரணம் தெரியவில்லை (தற்போது இந்த வகையில் 48 இறப்புகள் உள்ளன).

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களில் ஒன்பது இறப்புகள் பதிவாகியுள்ளன.

இந்த ஒன்பது இறப்புகளில் ஒன்று நேற்று நார்த் ஷோர் மருத்துவமனையில் நிகழ்ந்தது.

இதனிடையே நியூசிலாந்தில் இதுவரை பதிவாகிய கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 91 ஆக உள்ளது.

"இந்த மரணங்கள் ஒவ்வொன்றும் ஒரு குடும்பம் மற்றும் சமூகம் துக்கத்தில் இருப்பதை பிரதிபலிக்கிறது, எனவே நான் அதை ஒப்புக்கொண்டு எனது இரங்கலை தெரிவிக்க விரும்புகிறேன்" என்று டாக்டர் ப்ளூம்ஃபீல்ட் கூறினார்.

மேலும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது நியூசிலாந்தின் கொவிட் இறப்பு விகிதம் மிகக் குறைவாகவே உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.