எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு நிதியை விடுவிக்க இலங்கை மத்திய வங்கிக்கு அறிவுறுத்துமாறு தொழிற்சங்கவாதியான ஆனந்த பாலித ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடு பாரிய மின்வெட்டுக்கு முகம்கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவின் கருத்துக்கள் எவ்வாறாயினும்,நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக 300-900 மெகாவோட் மின்சாரம் மாத்திரமே எரிபொருள் வழங்கல் இன்றி உற்பத்தி செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இலங்கை மின்சார சபைக்கு எரிபொருளை வழங்காமல் இருப்பது அமைச்சர் கம்மன்பிலவின் பணிப்புரையினால் அல்ல எனவும் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடியதன் பின்னர் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தினாலேயே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் தொடர்பில் அமைச்சர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கப்பல்கள் விடுவிக்கப்படாமல் மின்சார சபை, தொழிற்சாலைகள் மற்றும் பொதுமக்களுக்கு எரிபொருள் கிடைக்காது என்றும், தற்போதைய நிலைமை தொடர்ந்தால் ரயில் சேவையும் பாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மின்சார சபைக்கு தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

​​​​