மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் பொலிஸ் சிஐடி எனக் கூறி வீடு ஒன்றில்  நுழைந்து ஆண் ஒருவரை கட்டி வைத்துவிட்டு அவரின் மனைவியின்  காதில் இருந்த தோடு மற்றும் தங்கச் சங்கிலி உட்பட 2 அரைப் பவுண் தங்கநகைகளை கொள்ளையடித்துச் சென்ற 6 கொள்ளையர்களை கடந்த புதன்கிழமை (12) கைது செய்துள்ளதுடன் கார் ஒன்று மற்றும் கொள்ளையடிக்கப் பயன்படுத்திய கோடரி ,கத்தி 3 கையடக்க தொலைபேசிகள் என்பவற்றை மீட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பி.எஸ்.பி பண்டார தெரிவித்தார்.

கடந்த 5 ஆம் திகதி வெல்லாவெளி பிரதேசத்தில் சிஐடி என தெரிவித்து கொள்ளையர்கள் பெண் ஒருவரை கட்டிவைத்து அவரின் காதில் இருந்த தோடு மற்றும் தங்கச் சங்கிலி உட்பட 2 அரை பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இதில் சந்தேகத்தில் இருவரை கைது செய்து விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வந்தனர்.

விசாணையில் அவர்கள் வழங்கிய தகவலுடன் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றையடுத்து  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்கவின் ஆலோசனைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் பரிசோதகர் பி.எஸ்.பி பண்டார தலைமையிலான பொலிசார் சம்பவ தினமான புதன்கிழமை (12) ஓட்டமாவடி, கிரான் பிரதேச  செயலகப் பிரிவிலுள்ள வட்டவான். மற்றும் வெல்லாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 4 பேரை கைது செய்தனர்.

இதில் 31,34,29,31 வயதுடையவர்களைக் கைது செய்துள்ளதாகவும் இவர்கள் கடந்த காலத்தில் குற்றச் செயல் காரணமாக கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த போது 4 பேரும் நண்பர்களாகி சிறையில் இருந்து வெளியில் வந்ததும் கொள்ளையடிப்பதற்காகன திட்டங்களைத் தீட்டி வாடகைக்கு கார் ஒன்றை எடுத்துக் கொண்டு கடந்த 5ஆம் திகதி வெல்லாவெளி பிரதேசத்தில் குறித்த வீட்டினுள் பொலிஸ் சிஐடி என தெரிவித்து உள் நுழைந்து குறித்த பெண்ணின் கணவனின் கைகளை பின்பக்கமாக கட்டிவைத்துவிட்டு பெண்ணின் காதில் இருந்த தோடு மற்றும் கழுத்தில் இருந்த  தங்கசங்கலி உட்பட 2 அரை பவுண் தங்க ஆபரணங்களை கொள்ளையடித்து தப்பி ஓடியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கொள்ளையடித்த தங்க ஆபரணங்களை பினான்ஸ் கம்பனி ஒன்றில் ஒரு இலட்சத்து 91 ஆயிரம் ரூபாவுக்கு ஈடுவைத்து அந்தப் பணத்தை பங்கு கொண்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் கொள்ளைக்குப் பயன்படுத்திய வாடகைக்கார் ஒன்று, 3 கையடக்க தொலைபேசி, கத்தி, கோடரி என்பவற்றை மீட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.