ஒமைக்ரான் வைரசுக்கு எதிரான தடுப்பூசி மார்ச் மாதம் தயாராகி விடும் என்று பிரபல மருந்து நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுவரை உருவான உருமாறிய கொரோனா வைரஸ்களில் அதிக ஆபத்தானதாக ஒமைக்ரான் வைரஸ் கருதப்படுகிறது.

இதனால் ஒமைக்ரான் வைரசுக்கு எதிராக எப்போது தடுப்பூசி வரும் என்ற கேள்வி அதிகரித்துள்ளது.

இதற்கு பதில், அமெரிக்காவை சேர்ந்த பிரபல மருந்து நிறுவனமான பைசரிடம் இருந்து வந்திருக்கிறது. இதையொட்டி அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆல்பர்ட் பவுர்லா கூறியதாவது...

ஒமைக்ரான் தொற்றுக்கு எதிரான எங்களது தடுப்பூசி மார்ச் மாதம் தயாராகி விடும். பல்வேறு நாடுகளின் அரசாங்கங்களின் தீவிர ஆர்வம் காரணமாக இந்த தடுப்பூசி டோஸ்களை எங்கள் நிறுவனம் உற்பத்தி செய்யத்தொடங்கி விட்டது.

இது தற்போதுள்ள பிற உருமாறிய வைரஸ்களுக்கும் எதிராக செயல்படும். இது நமக்கு தேவையா என்பது எனக்கு தெரியவில்லை. இது எப்படி பயன்படுத்தப்படும் என்பதும் எனக்கு தெரியவில்லை.

தற்போது கொரோனாவுக்கு எதிராக 2 டோஸ் தடுப்பூசிகள், ஒரு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. இவை ஒமைக்ரானுக்கு எதிராக நியாயமான பாதுகாப்பை வழங்கி உள்ளன.

ஆனால் ஒமைக்ரான் வைரஸ் மீது நேரடியாக கவனம் செலுத்தும் ஒரு தடுப்பூசியானது, 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களையும் பாதிக்கும், அதிவேகமாக பரவுகிற ஒமைக்ரான் போன்ற உருமாறிய வைரசுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கும்” என்று அவர் கூறினார்.