ஐக்கிய மக்கள் சக்தியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சி தலைவர் பதவிக்கு மைத்திரிபால சிறிசேனவிற்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் மோதல் இடம்பெறப்போகின்றது என ஊகஙகள் வெளியாகியுள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சி தலைவர் பதவியில் எந்த மாற்றமுமில்லை-நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை எதிர்கட்சி உறுப்பினர்களின் ஆதரவு சஜித்பிரேமதாசவிற்கே உள்ளது என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அவரே எங்கள் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2015இல் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஐக்கியதேசிய கட்சி ஆதரவளித்தவேளை நான் தெரிவித்த விடயங்கள் சரியானவை என்பதை தற்போது ஐக்கிய தேசிய கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது என தெரிவித்துள்ள திஸ்ஸ அத்தநாயக்க சிறிசேனவை பொதுவேட்பாளராக நிறுத்துவதால் ஐக்கிய தேசிய கட்சிக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என நான் தெரிவித்திருந்தேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனது எதிர்வுகூறல்கள் சரியானவையாக மாறியுள்ளன – நாட்டை ஆண்ட ஐக்கியதேசிய கட்சியினால் கடந்த தேர்தலில் ஒரு ஆசனத்தை கூட பெறமுடியவில்லை எனஅவர் தெரிவித்துள்ளார்.

தற்போது தனது முடிவு குறித்து ஐக்கிய தேசிய கட்சி தலைவர் கவலைப்படுகின்றார் போல தெரிகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.