மரபணு மாற்றப்பட்ட பன்றி  இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் மனிதருக்கு பொருத்திய உலகின் முதல் நபர் என்ற பெருமையை அமெரிக்கர் ஒருவர் பெற்றுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த டேவிட் பென்னட் என்ற 57 வயதான நபரின் உயிரை காப்பாற்ற அவருக்கு மாற்று இதயம் பொருத்த வேண்டியிருந்தது.

ஆனால் மருத்துவ காரணங்களால், மனித இதயம் பொருத்தப்படுவதற்கு அவர் தகுதியற்றவராக இருந்தார்.

இதன் காரணமாக டேவிட் பென்னட்டை காப்பாற்ற இறுதி முயற்சியாக அவருக்கு மரபணு மாற்றப்பட்ட  பன்றியின் இதயத்தை பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

இதற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம், புத்தாண்டின் போது அனுமதியளித்தது. அதனைத்தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமையன்று அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் பன்றியின் இதயத்தை டேவிட் பென்னட்டிற்கு பொருத்தியுள்ளனர்.

டேவிட் பென்னட்டுக்கு பொருத்தப்பட்ட இதயம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் உடலிலிருந்து எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பன்றியின் உறுப்புகளை மனித உடம்பு ஏற்காமல் போவதற்கு காரணமாக இருக்கும் மூன்று மரபணுக்களை பன்றியின் உடலிலிருந்து நீக்கி, பன்றியின் இதய திசுவை தேவைக்கு மேல் வளர செய்யும் மரபணுவையும் நீக்கி, பன்றியின் உறுப்பை மனித உடல் ஏற்பதற்காக, ஆறு மனித மரபணுக்களை பன்றியின் உடலில் செலுத்தியுள்ளனர்.

அதன்பின் பன்றியின் இதயம் டேவிட் பென்னட்க்கு பொருத்தப்பட்டுள்ளது.

கடந்தாண்டு அமெரிக்காவில், மூளை சாவு அடைந்த ஒருவருக்கு பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி சாதித்திருந்தனர்.

தற்போது அதேநாட்டை சேர்ந்த மருத்துவர்கள் ஒருபடி மேலே சென்று, சுயநினைவுடன் இருக்கும் மனிதனுக்கு பன்றியின் இதயத்தை பொருத்தியுள்ளனர்.

மனிதனுக்கு பன்றியின் இதயம் பொருத்தப்பட்டது வெற்றியடைந்தால், அது மனித உடல் உறுப்புகளுக்கான தட்டுப்பாட்டை போக்கும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.