2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு கொரிய மொழி பாடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொரியக் குடியரசின் பிரதிப் பிரதமரும் கல்வி அமைச்சருமான யூ யூன் ஹையுடன் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சியோலில் வைத்து கலந்துரையாடினார்.

இதன்போது, கொய்க்கா மற்றும் கொரிய குடியரசின் எக்சிம் வங்கி ஆகியவற்றின் தலைமையிலான வெளிநாட்டு அபிவிருத்தி உதவிகள் போன்ற இரு நாடுகளுக்குமிடையிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்புக்கள் குறித்து அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டார். இந்த வேலைத்திட்டங்களினால் இலங்கைக்குக் கிடைத்த நன்மைகள் குறித்து அமைச்சர் பீரிஸ் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

 
கொரியக் குடியரசில் பணிபுரியும் 22,000 இலங்கையர்கள் குறித்து கருத்துத் தெரிவித்த வெளிநாட்டு அமைச்சர், இலங்கையில் கொரிய மொழியின் புலமையை நோக்கமாகக் கொண்ட கற்பித்தல் நிகழ்ச்சிகளின் பிரபல்யம் குறித்து சுட்டிக்காட்டினார்.

மேலும், 2023ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் கொரிய மொழி ஒரு பாடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு அமைச்சர் பீரிஸுக்குப் பதிலளித்த பிரதிப் பிரதமர் யூ யூன் ஹை, இலங்கையில் தொழில்சார் கல்வி மற்றும் பயிற்சித் துறையில் முன்முயற்சிகளுக்கு விரிவான உதவிகளை வழங்குவது குறித்து கொரியக் குடியரசு பரிசீலிக்கும் எனக் குறிப்பிட்டார்.