சமையல் எரிவாயு வெடிப்புச்சம்பவங்களிற்கு லிட்ரோ காஸ் நிறுவனத்தின் உயர் முகாமைத்துவமே காரணம் என்பது வெளிப்படையாக தெரியவந்துள்ள போதிலும் அவர்களை விசாரணை செய்ய முடியாத நிலையில் சிஐடியினர் உள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து சிஐடியினர் இதுவரையில் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சிஐடியினரிடம் தான் முறைப்பாடு செய்துள்ள போதிலும் இதுவரையில் லிட்ரோவின் உயர் முகாமைத்துவத்தினரை அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தவில்லை என  முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஏன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சிஐடியினரிடம் விளக்கம் கோரியுள்ளதாக முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி நியமித்த குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையை அடிப்படையாக வைத்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என நாங்கள் கருதினோம்,ஆனால் அந்த அறிக்கையை  அலட்சியம் செய்துவிட்டனர் என முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

லிட்ரோவின் சிரேஸ்ட முகாமையாளர்களை சிஐடியினர் இன்னமும் விசாரணை செய்யாததை எவ்வாறு நியாயப்படுத்த முடியும் அதனை எவ்வாறு விளங்கிக்கொள்வது ஏற்றுக்கொள்வது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனவரி 20 லிட்ரோ தலைவர்-பிரதம நிறைவேற்று அதிகாரி தீசரா ஜெயசிங்கவும் ஜனாதிபதி ஊடகபிரிவு ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாட்டில் சமையல் எரிவாயு கலவையில் மாற்றங்களை மேற்கொள்வில்லை என தெரிவித்தனர் ஆனால் அதற்கு அடுத்த நாள் ஜனாதிபதி நியமித்த குழு கலவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களே வெடிப்பிற்கு பிரதான காரணம் என தெரிவித்தது என முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

லிட்ரோ நிறுவனத்தின் உயர்அதிகாரிகளை விசாரணை செய்யவேண்டாம் என அரசாங்கத்தின் உயர்மட்டத்தினர் சிஐடியினருக்கு உத்தரவிட்டுள்ளனரா என முஜிபூர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நான் ஒரு மாதத்திற்கு முன்னர் முறைப்பாடு செய்துள்ள போதிலும் சிஐடியினர் என்னிடம் இதுவரை வாக்குமூலம் பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

லிட்ரோ நிறுவனத்தின் முகாமைத்துவத்தில் மாற்றங்களை அரசாங்கம் மேற்கொண்ட பின்னரே வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற ஆரம்பித்தன, என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அனில்கொஸ்வத்தையை தலைவர் பதவியிலிருந்து –நீக்கிவிட்டு ஜனாதிபதியின் வியத்மகவை சேர்ந்த தேசரஜெயசிங்கவை நியமித்தனர் என தெரிவித்துள்ள  அவர் ஜயசிங்க அனில்கொஸ்வத்தையை சாடியதையும் நினைவுகூர்ந்துள்ளார்.