ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது, இலங்கை கிரிக்கெட் அணியின் தற்காலிக தலைமைப் பயிற்சியாளராக ருமேஷ் ரத்நாயக்க

இம்மாதம் 07ஆம் திகதி இலங்கை வரும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி, சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) ஒருநாள் சுபர் லீக்கிற்காக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவிருக்கின்றது.

நிலைமைகள் இவ்வாறு இருக்க இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் மிக்கி ஆத்தரின் பதவிக்காலம் நிறைவடைந்த பின் தலைமைப் பயிற்சியாளர் இன்றி காணப்படும் இலங்கை கிரிக்கெட் அணிக்கே தற்காலிக தலைமைப் பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், இலங்கை கிரிக்கெட் உயர் செயற்திறன் நிலையத்தின் (High Performance Center) பந்துவீச்சுப் பயிற்சியாளருமான ருமேஷ் ரத்நாயக்க நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.

இதேநேரம் உயர் செயற்திறன் நிலையத்தின் துடுப்பாட்டப் பயிற்சியாளராக காணப்படும் ருவின் பீரிஸ் ஜிம்பாப்வே தொடரின் போது இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளராக தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் செயற்படவிருக்கின்றார் என இலங்கை கிரிக்கெட் சபை (SLC) குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை இலங்கை – ஜிம்பாப்வே அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இம்மாதம் 16ஆம் திகதி கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகின்றது.