எதிர்காலத்தில் நாட்டில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் மண்ணெண்ணெய்க்குப் பதிலாக விமான எரிபொருளை வழங்க எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர். ஓல்கா கூறினார்.

இந்த எரிபொருளின் பாவனை தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும், இந்த எரிபொருள் பாவனை 100 வீதம் விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் பல முறை மண்ணெண்ணெய்க்குப் பதிலாக ஜெட் எரிபொருள் பயன்படுத்தப்பட்டதால், இது புதிய சோதனை அல்ல என்றார். இரண்டு எரிபொருட்களுக்கும் இடையிலான ஒரே பெரிய வேறுபாடு நிறம் என்றும் அவர் கூறினார்.

"உலகச் சந்தையில் மண்ணெண்ணெய் என்று எந்த எரிபொருளும் இல்லை, அது ஜெட் எரிபொருள் என்று அழைக்கப்படும் ஜெட் எண்ணெய். மண்ணெண்ணெய் தட்டுப்பாடு வராது என்பதில் 100% உறுதியாக இருக்க முடியும். ஆனால் அவசர காலத்தில் எங்களிடம் ஏற்கனவே ஜெட்  எண்ணெய் உள்ளது. மண்ணெண்ணெய் என்று கொடுக்கிறோம். இது சம்பந்தமாக பாதகமான சூழ்நிலைகள் எதுவும் இல்லை” என்று செயலாளர் கே.டி.ஆர். ஓல்கா வலியுறுத்தினார்.