பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து  இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் புதிய தலைவர் ரோகினி மாரசிங்க சிஐடி- டீஐடி  பொலிஸ் சட்ட பிரிவின் தலைவர்களுடன் இன்று முக்கிய பேச்சுவார்த்தையை மேற்கொள்ளவுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து ஆராய்வதற்காக இன்று இடம்பெறவுள்ள சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் சிஐடி- டீஐடி பொலிஸ் சட்ட பிரிவு ஆகியவற்றின் இயக்குநர்களிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

யுத்தத்தின் போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களிற்கு அப்பால் 2010 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பலர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டள்ளனர்.

மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவராக பதவிவகித்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் பாலசூரிய அந்த பதவியிலிருந்து விமர்சனங்கள் காரணமாக இராஜினாமா செய்துள்ளதை தொடர்ந்து புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ரோகிணி மாரசிங்கவின் முன்னுரிமைக்குரிய விடயமாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்படுதல் விளங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச சமூகமும் சிவில் சமூகத்தை சேர்ந்த சிலரும் வேண்டுகோள் விடுப்பது போன்று பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடமுடியாது என அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன என ஐலண்ட்  செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றவர்களின் கரிசனைகளிற்கு தீர்வு காண்பதற்கு தயார் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.