திருகோணமலை எண்ணெய் குதங்களை கையாள்வதற்கான புதிய துணை நிறுவனமொன்றை உருவாக்குமாறு அமைச்சர் உதயகம்மன்பில  இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு உத்தரவிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சரவையின் அனுமதியை பெறுவதற்கு முன்னரே இந்த நிறுவனத்தை உருவாக்குமாறு அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நிறுவனத்தை உருவாக்கிவிட்டு பின்னர் அமைச்சரவையின் அனுமதியை பெறுமாறு ஜனாதிபதி தனக்கு உத்தரவிட்டுள்ளார் என உதயகம்மன்பில  இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின்  தலைவர் சுமித்விஜயசிங்கவிற்கு தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவு குறித்து ஜனாதிபதி அலுவலகம்  அமைச்சின் செயலாளருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து திருகோணமலை எண்ணெய் குதங்களை கையாள்வதற்காக புதிய நிறுவனத்தை உருவாக்கும் நடவடிக்கைகளை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆரம்பித்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய நிறுவனம்  டிரிங்கோ பெட்ரோலியம் டேர்மினல் லிமிடட் என அழைக்கப்படும்  என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எல்ஐஓசியுடன் எரிசக்தி அமைச்சு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ள நிலையிலேயே இந்த விடயம் இடம்பெற்றுள்ளது.

எல்ஐஓசியுடன் எண்ணெய் குதங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக பெட்ரோலிய கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளார்.

யுகனதேவி மின்நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கு முன்னர் அமைச்சரவையின் அனுமதி பெறப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ள நிலையிலேயே திருகோணமலை எண்ணெய் குத நிறுவனம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.