மியன்மாரில் இராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தியபோது, பதவியில் இருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை 2 ஆண்டுகளாக குறைத்து மியன்மார் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

76 வயதான  ஆங் சான் சூகியின் மீது தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து வைத்திருந்தது; அரசுக்கு எதிராக போராட்டங்களை தூண்டியது; கொரோனா தடுப்பு விதிகளை மீறியது என்பன உட்பட 12 குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டன.

இந்த குற்றச்சாட்டுகளில் அரசுக்கு எதிராக போராட்டங்களை தூண்டியது மற்றும் கொரோனா தடுப்பு விதிகளை மீறியது தொடர்பான 2 வழக்குகளின் விசாரணை அண்மையில் நிறைவடைந்தது.

இதில் ஆங் சான் சூகி மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கூறி நேற்றைய தினம் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

எனினும் இந்த தண்டனையை அனுபவிக்க அவர் சிறைக்கு அனுப்பப்படுவாரா அல்லது வீட்டு சிறையே தொடருமா என்று இன்னும் தெளிவாகவில்லை.

அதேபோல் அவர் மீது தொடுக்கப்பட்டுள்ள மேலும் பல வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

ஆங் சான் சூகியுடன் சேர்த்து மியன்மாரின் முன்னாள் அதிபரும், ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கூட்டணியில் இருந்தவருமான வின் மைண்ட்க்கும் சிறை தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆங் சான் சூகி மற்றும் முன்னாள் அதிபர் வின் மைண்ட் ஆகியோருக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை 2 ஆண்டுகளாக குறைத்து நீதிமன்றம் புதிய உத்தரவை நேற்று பிறப்பித்தது.

இதனிடையே ஆங் சான் சூகிக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது குறித்து உலக அளவில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், நோபல் கமிட்டி உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புகளும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன.

மலேசிய சட்டமன்ற உறுப்பினரும் மனித உரிமைகளுக்கான ஆசியான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவருமான சார்லஸ் சாண்டியாகொ, ‘நீதிக்கு எதிராக நடைபெறும் கேலிக்கூத்து இது’ என்று கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.