மதுபான கடை  ஒன்றில் கொவிட்-19 தடுப்பூசி பாஸ் இல்லாமையால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மக்களை கத்தியைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்படும் டன்னீடன் நபர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

46 வயதான அவர் இன்று பிற்பகல் டன்னீடன் மாவட்ட நீதிமன்றத்தில் கொலை மிரட்டல், காவல்துறை அதிகாரியைத் தாக்குதல், கத்தியை வைத்திருந்தமை, சொத்துக்களை சேதப்படுத்துதல் மற்றும் கஞ்சா வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் ஆஜர்படுத்தப்பட்டார்.

நேற்றிரவு 8.30 மணியளவில் மத்திய டன்னீடனில் உள்ள The Bog Irish மதுபான கடைக்கு காவல்துறை அதிகாரிகள் அழைக்கப்பட்டனர்.

தடுப்பூசி பாஸ் இல்லாததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் 46 வயதான அவர் குளியலறையில் தன்னைப் பூட்டிக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குளியலறையில் இருந்து கத்தியுடன் வெளியே வந்த அவர் ஜன்னலையும் கையால் அடித்து உடைத்தார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட நபர் இன்று டன்னீடன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது அவரின் பெயரை வெளியிடாமல் இருப்பதற்கான இடைக்கால அனுமதி வழங்கப்பட்டதுடன் அடுத்த வாரம் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.