தனது வீட்டிலிருந்த உண்டியலில் பணம் குறைந்திருப்பதை அவதானித்த தாய், அவரது 15 வயது மகனை கண்டித்ததோடு, வீட்டில் இவ்வாறு நடந்து கொண்டால் வெளியிடங்களுக்கு செல்லும்போதும் இக் கெட்ட பழக்கதானே வரும் என்று புத்திமதியும் கூறியுள்ளார்.

தாயின் கண்டிப்பையும், புத்திமதியையும் கேட்டுக்கொண்டிருந்த மகன், தாய் வீட்டிலிருந்து வெளியாகிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தூக்கிட்டு மரணித்துள்ள சம்பவம் நேற்று(04) சந்திவெளி,  கோரகள்ளிமடு பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

அவ்வாறே, நேற்று (04) மாலை தலைவலியென தனது தாயிடம் தெரிவித்த வேப்பவெட்டுவான், காரைக்காட்டை சேர்ந்த 14 வயதுடைய மாணவி ஒருவர். பெனடோலுடன் வேறு மாத்திரைகளையும் சேர்த்து விழுங்கி மயக்கமடைந்ததால், கரடியனாறு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணித்துள்ளார்.

மேலும் இன்று (05) அதிகாலை கோப்பாவெளி, தும்பானஞ்சோலையை சேர்ந்த 64 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர், வேளான்மை காவலுக்கு நின்ற போது, யானையின் தாக்குதலுக்குள்ளாகி மரணித்துள்ளார்.

இம் மூன்று சம்பவங்களும் இடம்பெற்ற இடங்களுக்கு, நீதிபதியின் கட்டளைக்கமைவாக நேரடியாக சென்ற ஏறாவூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி MSM. நஸீர், விசாரணைகளை முன்னெடுத்து, PCR பரிசோதனைக்காகவும்,  பிரேத பரிசோதனைக்காகவும் சடலங்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தார்.