ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் ஷேன் வார்ன், பைக் விபத்தில் காயமடைந்ததை அடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன். சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான இவர், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்து தற்போது வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் சிட்னியில் உள்ள தனது வீட்டில் இருந்து மகன் ஜாக்சனுடன் ஞாயிற்றுக்கிழமை பைக்கில் பயணித்தபோது எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் அவர் காயமடைந்தார்.

பெரிய காயம் இல்லை என்றாலும் இன்று காலை உடல் வலி ஏற்பட்டதால் இடுப்பு மற்றும் காலில் எலும்பு முறிவு ஏதும் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மகன் ஜாக்சனுடன் ஷேன் வார்னுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஷேன் வார்ன், விபத்தில் காயமடைந்துள்ளேன். வலி அதிகமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷேன் வார்னே, 708 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

அவர் விரைவில் குணமடைந்து டிசம்பர் 8 ஆம் திகதி தொடங்கும் ஆஷஸ் தொடருக்கு வர்ணனையாளராக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.