அண்மையில் பல இடங்களில் வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியமைக்கு அவற்றின் கலவையில் ஏற்பட்ட மாற்றமே காரணம் என அரச பகுப்பாய்வாளர் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதனை இன்று ‘டெய்லி மிரர்’ பத்திரிகை தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது.

லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்கள் எரிவாயுக் கலவையை முறையான அனுமதியின்றி மாற்றியதாகவும் அறிக்கை கூறுகிறது.

இலங்கை ஒரு வெப்ப மண்டல நாடாக இருப்பதால், வாயுக் கலவையில் குறைந்த சதவீத புரொப்பேன் மற்றும் அதிக சதவீத பியூட்டேன் இருக்க வேண்டும்.

அண்மையில் கொழும்பு, வெலிகம, கண்டி ஆகிய இடங்களில் இடம்பெற்ற வெடிப்புகளுக்கு வாயுக் கசிவே காரணம் என அரசாங்கப் பகுப்பாய்வாளர் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து,

எரிவாயுசிலிண்டர் கசிவு தொடர்பில் பொது மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு இலங்கை தர நிர்ணய நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை என விமர்சனம் எழுந்துள்ளது.

கடந்த ஏப்ரலில் இருந்து, லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் சிலிண்டரின் வாயுக் கலவையை பியூட்டேன் 80: புரோபேன் 20 இலிருந்து முறையே பியூட்டேன் மற்றும் புரோபேன் 50:50 என இலங்கை தர நிர்ணய நிறுவன அனுமதியின்றி மாற்றியுள்ளன. சிலிண்டர்களில் உள்ள வால்வுகளில் கசிவு ஏற்படுவதாக முறைப்பாடுகள் வருவதற்கு இதுவே காரணம் என்று கூறப்படுகிறது.

அமைச்சர்களான பந்துல குணவர்தன மற்றும் லசந்த அழகியவண்ண ஆகியோருக்கு இது பாரிய விபத்து என  அறிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அது உண்மை என தற்போது நிரூபணமாகியுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் துஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.