இந்தோனேசியா, பாகிஸ்தான், பிரேசில், இந்தியா மற்றும் பிஜி ஆகிய நாடுகளில் வசிக்கும் நியூசிலாந்தர்கள் டிசம்பர் முதல் மற்றொரு நாட்டில் 14 நாட்கள் தங்க வேண்டிய அவசியமின்றி நேரடியாக நாட்டிற்குள் பிரவேசிக்க முடியும்.

ஏப்ரல் மாதத்தில், டெல்டா மாறுபாடு இந்தியாவில் மோசமாக பரவியதால் NZ குடிமக்கள் உட்பட அனைத்து வருகையாளர்களையும் நியூசிலாந்திற்குள் வருகை தருவதை தடுக்க முடிவு செய்யப்பட்டது.

மேலும் இந்தியாவில் இருந்து நேரடியாக வரும் குடியிருப்பாளர்களுக்கான தடை பல மாதங்களாக தொடர்ந்தது.

இங்கு திரும்பி வர முயற்சிக்கும் கிவி குடியிருப்பாளர்கள் முதலில் 14 நாட்கள் வேறொரு நாட்டில் இருக்க வேண்டியிருந்தது.

இதனை அடுத்து பிரேசில், பப்புவா நியூ கினியா, இந்தோனேசியா மற்றும் பிஜி ஆகிய நாடுகளும் அடுத்தடுத்த வாரங்களில் ஆபத்தான நாடுகள் பட்டியலில் சேர்க்கப்பட்டன.

இந்நிலையில் நியூசிலாந்து 5 நாடுகளை 'மிக அதிக ஆபத்தான நாடுகள்' பட்டியலில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது.

அந்த வகையில் இந்தோனேசியா, பாகிஸ்தான், பிரேசில், இந்தியா மற்றும் பிஜி ஆகிய நாடுகளில் இருந்து NZ குடியிருப்பாளர்கள் இங்கு வருவதற்கு முன் 14 நாட்கள் வேறு நாட்டில் இருக்க வேண்டியதில்லை.

மேலும் மிக அதிக ஆபத்தான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து இருக்கும் ஒரே நாடு பப்புவா நியூ கினியா ஆகும்.

இது குறித்து குடிவரவு ஆலோசகர் கேட்டி ஆம்ஸ்ட்ராங் கூறுகையில்..

 நூற்றுக்கணக்கான  நியூசிலாந்தர்கள் பல மாதங்களாக நாட்டுக்குள் வர முடியாது சிக்கித் தவிக்கின்றனர், பலர் குடும்ப அவசரநிலைகளைச் சமாளிக்க வீட்டிற்குச் செல்ல வேண்டியிருப்பதாக தெரிவித்தார்.

 மேலும் "நியூசிலாந்தியராகிய நாம், நமது சுகாதாரப் பணியாளர்கள் வெளிநாடுகளில் இருந்தும், முக்கியமாக இந்தியா போன்ற நாடுகளில் இருந்தும் வருகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்," என்று அவர் கூறினார்.

 "அவர்களின் பாதையைத் தொடர்ந்து தடுப்பதற்குப் பதிலாக, உள்ளே வரும் நபர்களை எவ்வாறு எளிதாக்குவது என்பது பற்றி நாம் மிகவும் புத்திசாலித்தனமாக சிந்திக்க வேண்டும்.  இல்லையெனில், நமக்கு மிகவும் தேவையான திறன்களைக் கொண்ட நல்ல மனிதர்களை நாம் இழந்து விடுவோம் என அவர் தெரிவித்தார்.