திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேசத்திற்கு உட்பட்ட குறிஞ்சாக் கேணிப் பகுதியில் ஆற்றில் பயணித்த படகு விபத்துக்குள்ளாகிய நிலையில் உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

குறிஞ்சாக் கேணிப் பகுதியில் ஆறு ஒன்றின் ஊடாக வழமைபோல மாணவர்களை ஏற்றிச் சென்றபோதே படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.

சில நூறு மீற்றர் தூரமேயான குறித்த ஆற்றுப் பயணத்தின்போது படகுப் பாதை கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளமை மக்கள் மத்தியில் மிகுந்த விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

படகுப் பாதை உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவதால், படகுப் பாதைக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் மோசடி இடம்பெற்றிருப்பதாக குற்றம்சாட்டியே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வீதிகளில் ரயர்கள் போடப்பட்டு எரிக்கப்பட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இதேவேளை, கிண்ணியா பிரதேச செயலத்தில் திரண்டுள்ள நூற்றுக்கணக்கான மக்கள் அரச அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

கிண்ணியாவில் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.