மத்தியபிரதேசம், கந்த்வா பகுதியில் கலால் அதிகாரி ஒருவர் ‘மது அருந்துவோர் பொய் சொல்ல மாட்டார்கள்’ என கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி கந்த்வா மாவட்டத்தில் இரு டோஸ் தடுப்பூசி செலுத்தியோருக்கு மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் சமீபத்தில் அறிவித்திருந்தது.

மாவட்டத்தில் 70க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்ற நிலையில் அவற்றில், இரு டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காண்பித்தால் மட்டுமே மதுபானம் கிடைக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, மாவட்ட கலால் அதிகாரி ஆர்.பி.கிரார் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மதுபானம் வாங்க வருவோர் தடுப்பூசி செலுத்தியது குறித்து வாய்மொழி உத்தரவாதம் அளித்தால் போதும். ஏனெனில், மது அருந்துவோர் பொய் சொல்ல மாட்டார்கள் என கூறியுள்ளார்.

இந்நிலையில் கலால் அதிகாரியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.