கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கன்னட திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் நேற்று முன்தினம் பெங்களூருவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.அவரது இந்த மரணம், அவரது குடும்பத்தினர், ரசிகர்கள், கன்னட மக்களை சோக கடலில் ஆழ்த்தியுள்ளது.

ராஜ்குமாரின் உடல் கன்டீரவா மைதானத்தில் அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் பொதுமக்கள், ரசிகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதலில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உள்பட அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.அதைத்தொடர்ந்து ரசிகர்கள் நீண்ட வரிசையில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள குக்கிராமங்களில் இருந்தும் ரசிகர்களும், பொதுமக்களும் பெங்களூருவை நோக்கி சாரை சாரையாக வந்த வண்ணம் இருந்தனர்.

மாநிலத்தின் மூலைமுடுக்குகளில் இருந்து வந்த சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினரும் நீண்ட கியூ வரிசையில் நின்று புனித் ராஜ்குமார் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

கொட்டிய மழையையும் பொருட்படுத்தாமல் வரிசையில் நின்று அவர்கள், புனித் ராஜ்குமார் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அமெரிக்காவில் இருந்து அவரது மகள் துருதி, விமானம் மூலம் டெல்லி வந்து அங்கிருந்து மற்றொரு விமானத்தில் பெங்களூரு வந்து சேர்ந்தார்.

அவரை போலீசார் பாதுகாப்புடன் கன்டீரவா மைதானத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு தனது தந்தையின் உடலை பார்த்து அவர் கதறி அழுதார்.

இந்நிலையில்,இன்று அதிகாலை 4 மணிக்கு அவரது இறுதி ஊர்வலம் புறப்பட்டது. புனித் ராஜ்குமாரின் உடல் கன்டீரவா ஸ்டூடியோவில் உள்ள அவரது பெற்றோர் நினைவிடம் அருகிலேயே 21 குண்டுகள் முழங்க அரசு முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.