எரிபொருள் விலைகளை தற்போதைக்கு அதிகரிக்கப்போவதில்லை என அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

திறைசேரி இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு உதவக்கூடியநிலையில் இல்லை என தெரிவித்துள்ள அமைச்சர் எனினும் எரிபொருட்களின் விலைகளை தற்போதைக்கு அதிகரிக்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்கதீர்மானித்தால் அதனை பகிரங்கமாக அறிவிப்பேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த முறையும் நான் இதனையே செய்தேன் இம்முறை நாங்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை மக்களிற்கு தெரியப்படுத்தியுள்ளேன் நாங்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒருலீற்றர் பெட்ரோலிற்கு 15 ரூபாய் நட்டமேற்படுகின்றது ஒரு லீற்றர் டீசலிற்கு 16 ரூபாய் நட்டமேற்படுகின்றது என தெரிவித்துள்ள அமைச்சர் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் விலைகளை அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும் நாங்கள் முதலில் திறைசேரியின் உதவியை நாடுவோம் என நான் அவரிடம் தெரிவித்தேன் என உதயகம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதால் எரிபொருள்விலையில் ஏற்படும் சிறிய மாற்றமும் பொதுமக்களிற்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் என கருதுகின்றேன் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை கூட்டத்தில் நிதியமைச்சரிடம் உதவியை கோரினேன்,அவர் அது சாத்தியமற்ற கடினமான விடயம் என குறிப்பிட்டார் மீண்டும் நான் இந்த விடயத்தை அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவருவவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.