தனியார் பேருந்து துறையைப் புதுப்பிக்க போக்குவரத்து அமைச்சு நிவாரணப் பொதியை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, ஒவ்வொரு பேருந்து உரிமையாளருக்கும்
ரூ .100,000 பெறுமதியான நிவாரணப் பொதிகள் வழங்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ் நிவாரணப் பொதியை வழங்க பேருந்துத் துறையில் ஈடுபட்டுள்ள 06 தனியார் நிறுவனங்கள் பங்களிப்பு செய்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிவாரணப் பொதிகளின் கீழ்  போக்குவரத்து சேவைகளுக்கு பயன்படுத்தப்படும் பேருந்துகளுக்கான டயர்கள், பற்றரிகள், மசகு எண்ணெய் மற்றும் உதிரிப் பாகங்களுக்கு விஷேட கழிவை வழங்க இந்தத் தனியார் நிறுவனங்கள் தேசிய போக்குவரத்து சேவைகள் ஆணைக்குழுவுடன் உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது, ​​கிட்டத்தட்ட 20,000 மாகாண மற்றும் மாகாணங்களுக்குட்பட்ட தனியார் பேருந்துகள் நாடளாவிய ரீதியில் பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஈடுபட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் இரத்தினபுரி மாவட்டத்தில் 1916 மாகாணங்களுக்கிடையிலான சேவையிலீடுபடும் பேருந்து உரிமையாளர்களுக்கும் 419 மாகாணத்துக் குள்ளே சேவையிலீடுபடும் பேருந்து உரிமையாளர் களுக்கும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நிவாரணப் பொதிகளை வழங்கியுள்ளதாகத் தெரியவருகிறது.