ஐ.பி.எல் என்னுடைய இறுதி ஆட்டம்வரை பெங்களூரு அணிக்காக மட்டும்தான் ஆடுவேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் 2021 தொடரின் லீக் போட்டிகளில் டெல்லி, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா ஆகிய நான்கு அணிகளும் அதிக போட்டிகளில் வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன. முதல் இரண்டு இடங்களைப் பிடித்த டெல்லி, சென்னை அணிகளுக்கு இடையே நேற்று போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இந்தநிலையில் இன்று பெங்களூரு, கொல்கத்தா அணிகள் மோதின.

டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதனையடுத்து, பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக தேவ்தத் படிக்கல், விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர். இருவரும் அணிக்கு நிதானமான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருப்பினும், படிக்கல், கோலி விக்கெட்டுகளைத் தொடர்ந்து வந்த மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் பெங்களூரு அணியால் 138 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

அதனையடுத்து, களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு வெங்கடேஷ் ஐயர், ஷூப்மன் கில் நிதானமான தொடக்கதைக் கொடுத்தனர். அடுத்தடுத்து வந்த வீரர்களும் தேவையான ரன்களைச் சேர்த்ததால் கொல்கத்தா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தத் தொடருடன் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக கோலி ஏற்கெனவே அறிவித்திருந்தார். கேப்டனாக அவரது இறுதிப் போட்டி தோல்வியில் முடிந்ததால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

போட்டிக்கு பிறகு பேசிய விராட் கோலி, ‘இளைஞர்கள் நம்பிக்கையுடனும், முழு சுதந்திரத்துடனும் விளையாடுவதற்கு தேவையான சூழலை உருவாக்குவதற்கு நான் என்னால் முடிந்த சிறந்ததைக் கொடுக்க முயற்சித்துள்ளேன். இந்திய அணி அளவிலும் நான் அதனைச் செய்துள்ளேன். நான், என்னுடைய சிறப்பானதைக் கொடுத்துள்ளேன். அதற்கு எவ்வளவு வரவேற்பு இருந்தது என்பது எனக்குத் தெரியாது.

ஆனால், ஒவ்வொரு வருடம் ஆர்.சி.பியை தலைமையேற்று என்னுடைய 120 சதவீத திறனை வெளிப்படுத்தியுள்ளேன் என்பதை உறுதியாகக் கூற முடியும். அதனை இந்த அணிக்கு இனிமேல் ஒரு வீரனாக செய்வேன். உறுதியாக வேறு எந்த அணிக்காகவும் நான் விளையாட மாட்டேன். என்னைப் பொறுத்தவரை மற்ற எல்லாவற்றையும் விட விசுவாசமாக இருப்பது மிகவும் முக்கியம். பெங்களூரு அணி என்னை நம்பியது. ஐ.பி.எல் தொடரில் நான் விளையாடும்வரை பெங்களூரு அணிக்கு மட்டும்தான் விளையாடுவேன்’ என்று தெரிவித்தார்