மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மக்கள் விரோத மற்றும் ஜனநாயக விரோத போக்கில் மத்திய  அரசு செயல்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பியுள்ளனர்.

வேளாண் சட்டத்தை திரும்ப பெறவும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்கவும் இதன்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க இளைஞரணி அலுவலகத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மத்திய அரசைக் கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை சி.ஐ.டி. காலனி இல்லத்தில் எம்.பி. கனிமொழி மற்றும் அசோக் நகர் விடுதலை சிறுத்தைகள் அலுவலகத்தில் சிதம்பரம் தொகுதி எம்.பி. திருமாவளவன் உள்ளிட்டோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதேபோல் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டு மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றுள்ளது.

இதனிடையே கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் டாக்டர் வரதராஜ் தலைமையில் நகர தி.மு.க.அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.