தூத்துக்குடி மாவட்டம் கொற்கையில் நடைபெற்று வரும் அகழாய்வில் அடுத்தடுத்து வியப்பூட்டும் பொருள்கள் கிடைத்துவரும் நிலையில், தற்போது இரண்டடுக்கு கொள்கலன் கண்டறியப்பட்டுள்ளது.

தமிழக தொல்லியல் துறை சார்பில் கடந்த பிப்ரவரி 26 ஆம் திகதியில் இருந்து கொற்கையில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுவரை அங்கு செங்கல் கட்டுமானங்கள், 9 அடுக்குகள் கொண்ட வடிகட்டும் குழாய், சங்கு அறுக்கும் தொழிற்சாலை என வியப்பூட்டும் 600-க்கும் அதிகமான பொருள்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில், கடந்த வாரம் செங்கல் கட்டுமானத்தின் அடியில் 4 அடி உயரம் கொண்ட கொள்கலன் கண்டறியப்பட்டது. அதை வெளியே எடுக்கும் பணியில் ஈடுபட்டபோது, அதன் அடியில் மற்றொரு கொள்கலன் இருந்துள்ளது.

கண்டெடுக்கப்பட்டது இரண்டடுக்கு கொள்கலன் என்றும், இந்த கொள்கலனில் பழந்தமிழர்கள் தானியங்களை சேமித்து வைத்திருக்கக்கூடும் என்றும் அகழாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.