" அமெரிக்காவுடனான எம்.சி.சி. உடன்படிக்கை வேறு பெயரில் வந்தால் கூட அதில் இலங்கை கைச்சாத்திடாது. நாட்டுக்கு நன்மை பயக்ககூடிய விடயங்களை மட்டுமே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் செய்யும்." - என்று அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

"உஸ்ம தெனதுரு" 20 இலட்சம் மர நடுகை வேலைத்திட்டத்தின் கீழ் அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் காசல்ரீ நீர்தேக்கப்பகுதிக்கு அண்மித்த லெதண்டி தோட்டத்தில் மர கன்றுகள் 18.12.2020 அன்று நாட்டப்பட்டது.

இப்பகுதியில் உள்ள நீர் வளம், வன வளம் ஆகியனவற்றை பாதுகாக்கும் நோக்கத்துடன், பொகவந்தலாவ பெருந்தோட்ட கம்பனியின் உதவியுடன், சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் சபையின் மேற்பார்வையின் கீழ் இந்த மர நடுகை வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.


இந்நிகழ்வில் அமைச்சர் உட்பட பொகவந்தலாவ பெருந்தோட்ட கம்பனியின் அதிகாரிகள், இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள், சுற்றாடல் துறை அமைச்சின் உயர் அதிகாரிகள், தோட்ட தொழிலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு.

எது எப்படியிருந்தாலும் அமெரிக்காவுடனான எமது இராஜதந்திர உறவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அது அவ்வாறே தொடரும். அமெரிக்காவும் இதனை அறிவித்துள்ளது.


நாட்டுக்கு நன்மை பயக்ககூடிய விடயங்களை மாத்திரமே இந்த அரசாங்கம் செய்யும். தீங்கு விளைவிக்ககூடிய எதனையும் செய்யாது.