சவுதிஅரேபியாவின் ஜெட்டாவின் கடற்பரப்பில் சிங்கப்பூர் கொடியுடன் காணப்பட்ட எண்ணெய்கப்பல் மீது வெடிகுண்டு நிரப்பப்பட்ட படகினை பயன்படுத்தி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

 

பிடபில்யூ ரைன் என்ற கப்பலே தாக்கப்பட்டுள்ளதாகவும், கப்பல்மீது பயங்கரவாத தாக்குதலே இடம்பெற்றது என சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

 

ஜெட்டாவில் கப்பல் தரித்து நின்றவேளை வெளியிலிருந்து இடம்பெற்ற வெடிவிபத்தினால் கப்பல் சேதமடைந்துள்ளது இதன் பின்னர் தீவிபத்தும் ஏற்பட்டது என கப்பலின் உரிமையாளர்களான சிங்கப்பூரை சேர்ந்த ஹனீபா என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

கப்பலில் 22 மாலுமிகள் காணப்பட்டனர் அவர்கள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை தீ அணைக்கப்பட்டுள்ளது என கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

சவுதிஅரேபியாவின் எண்ணெய் வளத்தினை இலக்குவைத்து இடம்பெறும்சம்பவங்களின் தொடர்ச்சியாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இதுவரை இந்த தாக்குதலிற்கு எவரும் உரிமை கோரவில்லை.

 

யேமனில் உள்ள ஈரான் சார்பு ஹெளத்தி தீவிரவாதிகள் சவுதிஅரேபியாவை இலக்குவைத்து தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.