அரச நிறுவனங்களின் செலவுகளை எதிர்வரும் ஆறு மாத காலத்துக்கு இயலுமான அளவு கட்டுப்படுத்துமாறும், அரச நிறுவனங்களுக்கு சேவையாளர்களை புதிதாக இணைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் நிதியமைச்சர் அனைத்து அரச நிறுவன பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கமைய அரச நிறுவனங்களின் மேலதிக செலவுகளை எதிர்வரும் 6 மாத காலத்துக்கு இயலுமான அளவு குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக அரச வருமானம் மிகப்பெருமளவில் குறைவடைந்துள்ள காரணத்தினால் இத்தீர்மானம் நிதியமைச்சரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களுக்கு புதிதாக சேவையாளர்களை இணைத்துக் கொள்வதை தற்காலிகமாக இடை நிறுத்துமாறு நிதியமைச்சர் அரச நிறுவன பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

மாகாண ஆளுநர்கள், மாவட்ட செயலாளர்கள், அரச நிறுவன பிரதானிகளுடன் இடம் பெற்ற கலந்துரையாடலின் போது நிதியமைச்சர் அரச செலவினம் தொடர்பில் ஆலோசனை வழங்கியுள்ளார்.

தேசிய தொழிற்துறை மற்றும் தேசிய உற்பத்திகளின் மேம்பாடு குறித்து அரச நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். வீழ்ச்சியடைந்துள்ள தேசிய தொழிற்துறையை அபிவிருத்தி செய்யும் திட்டங்கள் உரிய முறையில் செயற்படுத்தப்பட வேண்டும்.

முதலீட்டாளர்கள் மற்றும் கடன் மதிப்பீட்டு நிறுவனங்களின் வணிக சமூகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துதற்கான திட்டங்களை செயற்படுத்துமாறு நிதி மூலதனச்சந்தை மற்றும் நிதியமைச்சுடன் தொடர்புடைய இராஜாங்க அமைச்சுகளுக்கு நிதியமைச்சர் ஆலோசனை வழங்கினார்.