சமீபத்திய ransomware தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகளின் முழு அளவும் இன்னும் வெளிவரவில்லை என்று தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

நிர்வகிக்கப்பட்ட சேவை வழங்குநர்களுக்கும், சிறிய முதல் நடுத்தர வணிகங்களுக்கும் ஐடி மேலாண்மை மென்பொருளை வழங்கும் அமெரிக்காவைச் சேர்ந்த கசேயா, ransomware தாக்குதலுக்கு உள்ளானது.

இதனால் உலகெங்கிலும் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நியூசிலாந்தில் குறைந்தது 11 பள்ளிகளும் சம்பந்தப்பட்டுள்ளன.

ஒரு அறிக்கையில், கல்வி அமைச்சின் செய்தித் தொடர்பாளர், மேலும் கல்வி வழங்குநர்கள் ஏதேனும் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.

கேம்பிரிட்ஜில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பள்ளி இதில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தரவுகளை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இதன் விளைவாக, அனைத்து பள்ளி அமைப்புகளும் செயலற்றதுடன் மேலும் அடுத்த 48 மணிநேரங்களுக்கு இது நீடிக்கும் என்று பள்ளி முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.

சைபர் செக்யூரிட்டி கண்காணிப்புக் குழுவான CERT NZ,மென்பொருளின் அனைத்து பயனர்களையும் மீண்டும் அறிவிக்கும் வரை அதை மூடுமாறு கேட்டுக்கொண்டது.

இந்நிலையில் நியூசிலாந்தின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான டேடாகாம், தாக்குதலுக்குப் பிறகு காசியா மென்பொருளைப் பயன்படுத்தும் அதன் சேவையகங்களை மூடியமை குறிப்பிடத்தக்கது.