அழுகை என்றாலே கவலை, துக்கம் போன்ற எண்ணங்கள் தான் நினைவிற்கு வரும். அழுகை என்பது உணர்வின் உச்சக்கட்டம் என்றும் கூறலாம்..

சராசரியாக பெண்கள் வருடத்திற்கு 30 முதல் 64 முறை அழுகிறார்கள் என்றும் ஆண்கள் 6 முதல் 17 முறை மட்டுமே அழுகிறார்கள் என்றும் ஜேர்மனியைச் சேர்ந்த சொசைட்டி ஆஃப் ஆஃப்தல்மோலஜி கண்டறிந்துள்ளது.

வலி நிவாரணி

2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் அழுவதால் உடலளவிலும் மனதளவிலும் வலி நீங்குவதாகக் கூறியுள்ளது. வலியால் அழும்போது கண்ணீரில் சுரக்கும் ஆக்ஸிடோசின் மற்றும் எண்டோர்ஃபின்ஸ் மனதிற்கு அமைதியையும், வலியைத் தாங்கக் கூடிய வலிமையையும் அளிப்பதாகக் கூறியுள்ளது.

மற்றவர்களின் அரவணைப்பு

தெரியாதவர்கள் அழுதால் கூட அருகில் சென்று ஏன் அழுகிறீர்கள் என்று கேட்கும் மனநிலைதான் மனிதனுடைய இயல்பு.

அப்படி இருக்க தனக்கு நெருக்கமானவர்கள் அழுதால் பதறி அவர்களுக்கு ஆறுதல் அளித்து அரவணைப்போம். அந்த அரவணைப்பும் அவர்களுக்கு மிகப்பெரும் மன அமைதிதான். அதுவும் மற்றவர்களின் ஆறுதலை எதிர்பார்ப்பதால் வரும் இயல்பான கண்ணீரே.

மன ஆறுதல்

பொதுவாக மனம் விட்டு அழுதுவிட்டால் அந்த பிரச்சினை சரியாகவிடுவதோடு மனதில் ஒரு ஆறுதலும், மனம் ரிலாக்ஸாகவும் இருக்கும். காரணம் நாம் அழும்போது உடம்பில் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்ஸ் சுரந்து அது கண்ணீர் வழியாக வெளியே வந்துவிடுமாம்.

இதனால் அந்த ஹார்மோன் சுரத்தல் அளவு குறைந்துவிடும் என ஆராய்ச்சியில் நம்பப் படுகிறது. அதனால்தான் நாம் ஃபீல் குட் ஆக உணர்கிறோம் என்றும் சொல்லப்படுகிறது.

நல்ல தூக்கம்

அழுது கொண்டே தூங்கி விடும் குழந்தைகளைப் பார்த்திருப்போம். குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களுக்கும் அழுதால் தூக்கம் வரும். மனம் விட்டு அழுதாலோ, கதறி அழுதாலோ நிச்சயம் உங்களுக்குக் கண்ணீர் வரும். தொடர்ந்து அழுது கொண்டே இருந்தாலும் கண் எரிச்சல் ஏற்பட்டு தூக்கத்தை நாடுவீர்கள்.

கிருமிகளைக் கொல்லும்

அழும்போது கண்களில் ஐசோஸைமி (lysozyme) என்கிற அமிலம் சுரக்கிறது. அது கண்களில் உள்ள கிருமிகள் மற்றும் அழுக்குகளை நீக்கி சுத்தம் செய்கிறது. இதனால் நீண்ட அழுகைக்குப் பின் கண் பார்வையும் தெளிவடைவதாகவும், வறண்ட கண்களில் ஈரப்பதத்தைத் தக்க வைப்பதாகவும் தேசிய கண் மையம் விவரித்துள்ளது.