அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்க விரும்பவில்லை என, ஈரான் அதிபராக பதவி ஏற்க உள்ள இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை நீக்கி, அதன் சர்வதேச வர்த்தகத்தை அதிகரிக்க, இப்ராஹிம் ரைசி பல திட்டங்களை முன்மொழிந்துள்ளார். ஈரான் அணு ஆயுத சோதனைக்கு பல ஆண்டு காலமாக அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இது குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தப்படும் நிலையில், புதிதாக ஈரான் அதிபராக பதவி ஏற்கவுள்ள இப்ராஹிம் ரைசி, இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தான் ஜோ பைடனுடன் ஆலோசிக்க விரும்பவில்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அமெரிக்காவில் இப்ராஹிம் ரைசி நுழைய, ஜோ பைடன் அரசு தடை விதிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை தடை விதிக்கப்படுமானால் அமெரிக்க அரசால் தடை விதிக்கப்பட்ட முதல் ஈரான் அதிபர் என்கிற பெயரை இப்ராஹிம் ரைசி பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.