இலங்கையில் ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் இரண்டாவது டோஸை செலுத்தும் நடவடிக்கைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி , கொத்தட்டுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன என சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதேவேளை , நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ஹோல்புறுக் மற்றும் எல்பெத்த கிராம சேவகர் பிரிவுகளில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.

ஹோல்புறுக் தமிழ் மகா வித்தியாலயத்தில் தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதேச பொது சுகாதார பரிசோதகர் சிவக்கொழுந்து புஷ்பகாந்தன் தெரிவித்தார்.

மேலும் வட்டவளை கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையும் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக வட்டவளை பொது சுகாதார பரிசோதகர் எஸ்.காமதேவன் தெரிவித்தார்.