இலங்கை கால்பந்தாட்ட அணி வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் சன்மானம் வழங்கவுள்ளது.

தென் கொரியாவில் நடைபெற்ற கத்தார் 2022 உலகக் கிண்ணம் மற்றும் சீனா 2023 ஆசிய கிண்ணம் ஆகியவற்றுக்கான ஆசிய வலய எச் குழு இரண்டாம் சுற்றுப் போட்டியில் திறமையை வெளிப்படுத்தியமைக்காக இலங்கை வீரர்களுக்கு சன்மானம் வழங்கவுள்ளதாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அநுர டி சில்வா தெரிவித்தார்.

லெபனானுக்கு எதிரான போட்டியில் 2 – 3 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தபோதிலும் இலங்கை அணி அப் போட்டியில் அதி சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தியதாகவும் சர்வதேச அரங்கில் கடந்த 2 தசாப்தங்களில் இந்தப் பெறுபேறு இலங்கையினால் பதிவுசெய்யப்பட்ட அதிசிறந்த பெறுபேறு எனவும் அநுர டி சில்வா குறிப்பிட்டார்.

எனவே வீரர்களுக்கு பணப்பரிசு வழங்கி கௌரவிக்கவுள்ளதாகவும் சம்மேளன நிறைவேற்றுக் குழுவினருடன் கலந்துரையாடி இதற்கான தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, தென் கொரியாவில் உலகக் கிணணம் மற்றும் ஆசிய கிண்ணம் ஆகியவற்றுக்கான தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்றிய இலங்கை கால்பந்தாட்ட அணி நேற்று வியாழக்கிழமை இரவு நாடு திரும்பியது.

இலங்கை அணியினரை இலங்கை கால்பந்தாட்;ட சம்மேளனத் தலைவர் அநுர டி சில்வா வரவெற்றமை குறிப்பிடத்தக்கது. நாடு திரும்பிய இலங்கை அணியினர் தற்போது பெத்தகான பயிற்சி நிலையத்தில் தனிமைப்படுத்தலைக் கடைப்பிடித்துவருகின்றனர்.