மும்பையில் தொடரும் கனமழையால் நகர் முழுவதும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கும் நிலையில், கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி ,மகராஷ்டிரா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மும்பையில் வெளுத்து வாங்கும் மழையால், சாலைகள் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என மும்பை காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். சாலைகளில் வெள்ள நீர் தேங்கியதை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ,மழை நீர் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக, மும்பையில் அடுத்த ஐந்து நாட்கள் வரை மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 40முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்று வீசும் என்பதால், வடக்கு மகாராஷ்டிரா கடற்பகுதியில், மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.