டுவிட்டர் இணையத்தளத்தை நைஜீரியா தடை செய்ததை அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாராட்டியுள்ளார்.

இதன்படி ,நைஜீரியாவின் சுதந்திரப் போராட்டம் தொடர்பாக நைஜீரிய ஜனாதிபதி முஹம்மது புஹாரி, வெளியிட்ட பதிவொன்றை டுவிட்டர் நிறுவனம் நீக்கியதையடுத்து, டுவிட்டருக்கு நைஜீரியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தடையை டொனால்ட் ட்ரம்ப் வரவேற்றுள்ளார். டொனால்ட் ட்ரம்ப்புக்கு டுவிட்டர் நிறுவனம் நிரந்தரத் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் ட்ரம்பின் பேஸ்புக் கணக்கும் 2 வருடங்களுக்கு முடக்கப்பட்டுள்ளது.

அந்நிலையில் , டுவிட்டர் மீதான நைஜீரியாவின் தடையை பாராட்டியுள்ள டொனால்ட் ட்ரம்ப், ஏனைய நாடுகளும் டுவிட்டரையும் பேஸ்புக்கையும் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்திருள்ளார். இவ்விரு சமூக வலைத்தளங்களும் கருத்துச்  சுதந்திரத்தை அனுமதிப்பதில்லை என அவர் கூறியுள்ளார்.

மேலும் ,தான் ஜனாதிபதி பதவியிலிருக்கும்போதே, பேஸ்புக்கை தான் தடை செய்திருக்க வேண்டும் என ட்ரம்ப் கூறியுள்ளார். ஆனால், அந்நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸக்கர்பேர்க், தன்னை தொலைபேசியில் அழைத்தும், வெள்ளை மாளிகைக்கு விருந்துபசாரங்களுக்கு வந்தும் தான் (ட்ரம்ப்) எவ்வளவு சிறந்தவர் எனக் கூறிக்கொண்டிருந்தார் என டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.