மன்னார் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் காற்றலை மின் உற்பத்தி நிலையத்தில் மின்னிணைப்புக்கு உபயோகிக்கும் கேபிள் கம்பிகளை (cable wire) திருடியமை தொடர்பில் மின் உற்பத்தி நிலையத்தின் பாதுகாப்பு பிரிவில் கடமை புரிந்து வந்த உத்தியோகத்தர் ஒருவர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் , அதே பகுதியைச் சேர்ந்தவர்களே சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மின் உற்பத்தி நிலையத்துக்குச் சொந்தமான 340 மீட்டர் நீளமான கம்பிகள் திருடப்பட்டுள்ள பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற்றுவரும் காற்றலை மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகளை தனியார் நிறுவனம் ஒன்றே முன்னெடுத்து வருகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.