இலங்கையில் கொவிட் தொடர்பிலான தரவுகளை வெளியிடும் நிறுவனங்களின் தகவல்களின் பிரகாரம், கொவிட் தொற்றாளர்கள் மற்றும் கொவிட் உயிரிழப்புக்களின் உண்மை தன்மை தெளிவில்லாது காணப்படுகின்றது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உபத் தலைவர் டொக்டர் சந்திம எப்பிட்டிகடுவ தெரிவிக்கின்றார்.

அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் தரவுகளுக்கு அமைய, இலங்கைக்குள் முதல் 500 கொவிட் உயிரிழப்புக்கள், 343 நாட்களில் பதிவானதாக அவர் கூறுகின்றார்.அடுத்த 500 கொவிட் உயிரிழப்புக்கள், 72 நாட்களில் பதிவானதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

எனினும், மூன்றாவது 500 கொவிட் உயிரிழப்புக்கள் 13 நாட்களிலேயே பதிவானதாக அவர் கூறுகின்றார்.

இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,843ஆக அதிகரித்துள்ள நிலையில், அடுத்த 500 கொவிட் உயிரிழப்புக்கள் இதைவிடவும் குறைந்த நாட்களிலேயே பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுக்கின்றது.