இலங்கைக் கடற்பரப்புக்குள் தீப்பற்றியெரிந்த எக்ஸ்பிரஸ் பேரல் கப்பல் நிறுவனம் 100 பில்லியன் ரூபாய்களை நட்டஈடாக வழங்கினாலும், இதனால் சுற்றாடலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை மீட்டெடுக்க முடியாதென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதன்படி ,தீப்பற்றி எரிந்த இக்கப்பலால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் அரசாங்கம் அதிகக் கவனஞ் செலுத்துமெனவும், இந்த தீவிபத்துத் தொடர்பிலும், இந்த கப்பலை நாட்டுக்குள் யார் அனுமதித்தார்கள் என்பது தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் பொறுப்பற்ற வகையில் நடந்துக்கொண்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

கப்பல் மூழ்குமாக இருந்தால், அதனால் ஏற்படும் எண்ணெய்க் கசிவுகளில் இருந்து பாதுகாப்பது தொடர்பில் அரசாங்கம் கவனஞ் செலுத்தியுள்ளது. இக்கப்பலில் எண்ணெய்க் கசிவு ஏற்படுமாக இருந்தால், இயற்கைக்குப் பாரியப் பாதிப்புக்கள் ஏற்படுமெனவும் தெரிவித்தார்.

மேலும் ,எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாதிருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் எடுப்பதற்கும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதோடு, இச்சம்பவத்தோடு தொடர்புடைய அனைவரும் நிச்சியமாகத் தண்டிக்கப்பட வேண்டுமெனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர வலியுறுத்தினார்.