உலகிலேயே மிக உயரமான  8,849 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை சீனாவை சேர்ந்த ஷாங் ஹோங் என்பவர் எட்டியுள்ளார். 

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், ஷாங் ஹோங் கண்பார்வையை இழந்தவர். இவர் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை எட்டியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதுகுறித்து ஷாங் ஹோங் ராய்ட்டர்ஸ் ஊடகத்திடம் பேசியபோது, “சாதாரணமாக இருந்தாலும் சரி, மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் சரி, கை கால்களை இழந்தாலும் சரி, வலுவான மனம் இருந்தால் யார் என்ன சொன்னாலும் நீங்கள் தொட வேண்டிய இலக்கை தொட முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

ஷாங் ஹோங் மூன்று வழிகாட்டிகளின் உதவியுடன் சிகரத்தை அடைந்துள்ளார்.

சீனாவில் உள்ள சோங்கிங் பகுதியில் பிறந்த ஷோங் ஹாங் தனது 21ஆம் வயதில் கிளவுகோமாவால் கண்பார்வையை இழந்தார். எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை எட்டிய முதல் ஆசிய கண்பார்வை இழந்த நபர் என்ற பெயர் ஷோங் ஹாங்கிற்கு கிடைத்துள்ளது.