பின்லாந்து நாட்டின் பிரதமர் சன்னா மரினின் காலை உணவுக்கு மக்கள் வரிப் பணத்தில் சட்டவிரோதமாக செலவு செய்யப்படுவதாக அந்நாட்டை சேர்ந்த செய்தி ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பிரதமர் சன்னா மரினின் அரசு இல்லத்தில் ஒவ்வொரு மாதமும் காலை உணவுக்காக 300 யூரோ அரசு பணத்தில் இருந்து செலவு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்விவகாரம் பின்லாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தான் எந்தவொரு விதிமுறையையும் மீறவில்லை என பிரதமர் சன்னா மரின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது

"நான் பதவிக்கு வந்தபோது எனக்கான சலுகைகள் பற்றி என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இதே சலுகைகளை முந்தைய பிரதமர்களும் அனுபவித்துள்ளனர்.நானாக கட்டணம் எதையும் செலுத்தவில்லை. பிரதமர் அலுவலகமும், அதன் அதிகாரிகளும்தான் நேரடியாக கட்டணம் செலுத்தியுள்ளனர்.ஒரு பிரதமராக நான் இந்த சலுகையை கேட்கவில்லை. இதுபற்றி முடிவெடுக்கும் அதிகாரமும் எனக்கில்லை "என்று தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து முறையாக விசாரணை நடத்தப்படும் என பின்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.