அமெரிக்காவில் மோசடி வழக்கில் இந்தியர் ஒருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வசித்து வரும் இந்தியர் ஹிமான்சு அஸ்ரி (34). இவர் டெல்லியில் கால் சென்டர் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த பலரின் கணினி திரையில் விளம்பரம் ஒன்றை தோன்ற வைத்து, அதில் உங்கள் கணினியில் பாதிப்பு உள்ளது. சரி செய்ய எங்களை அணுகுங்கள் என தனது கால் சென்டரின் தொலைபேசி எண்ணை வழங்கியுள்ளார்.தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்களிடம் கம்ப்யூட்டரில் உள்ள பாதிப்பை சரி செய்ய பெரிய தொகையை வசூலித்து பின் கணினியை சரி செய்து விட்டதாக கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.இவ்வாறாக இந்திய மதிப்பில் சுமார் 22 கோடி வரை மோசடி செய்துள்ளார்.

இவரால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் அமெரிக்க நீதித் துறை நடத்திய விசாரணையில் உண்மைகள் தெரியவந்த நிலையில் கடந்த ஆண்டு ஹிமான்சு அஸ்ரியை போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹிமான்சு அஸ்ரி தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நீதிபதி இந்த வழக்கில் ஹிமான்சு அஸ்ரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.