போதைப்பொருள் குற்றங்களுக்காக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளே, மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மைக்கு காரணமென பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

 

மேலும் சிறைச்சாலையிலுள்ள மருந்தகத்திலிருந்து மனநோய் சம்பந்தமான நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் சுமார் 21,000 மாத்திரைகள் சில கைதிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

இதுவே சிறைச்சாலையில் அமைதியின்மை ஏற்படுவதற்கு காரணமாக அமைந்ததென்றும் சிறைச்சாலை வைத்திய பிரிவுக்கு, இவ்வாறான பாரிய தொகை மாத்திரைகள் எதற்காக வந்தது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன், இச்சம்பவத்தில் காயமடைந்த பல கைதிகள் தொடர்ந்து ராகம மற்றும் கொழும்பு வடக்கு வைத்தியசாலையில் கடுமையாக நடந்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

 

மேலும் 187 கைதிகள், கொழும்பு சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவத்துக்குப் பின்னர் அவர்கள் தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

இந்த சம்பவத்தின் ஆரம்பக்கட்ட விசாரதணைகளுக்கு அமைய, சிறைச்சாலையுடன் தொடர்புடைய வைத்தியருக்கும் இந்த சம்பவத்துடன் தொடர்பு இருக்கின்றமை தெரியவந்துள்ளதென்றார்.