பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நியாயமானது என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

 

பாராளுமன்றில் நேற்றைய தினம் (29) உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அதன்படி கடந்த 2015ஆம் ஆண்டில் பிள்ளையான் கைது செய்யப்பட்டதாகவும், பிரிதொரு நபர் தன்னார்வ அடிப்படையில் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

கடந்த ஐந்து ஆண்டுகளாக பிரிதொரு நபர் வழங்கிய ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படையிலேயே பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

 

இருப்பினும், இந்த ஒப்புதல் வாக்கு மூலம் சுயாதீனமாக தன்னார்வ அடிப்படையில் வழங்கப்பட்டது இல்லை என தெரியவந்துள்ளதாகவும், பிள்ளையானுக்கு எதிராக எவ்வித சாட்சியங்களும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இவ்வாறான பின்னணியிலேயே பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

 

நீதிமன்றம் மிகவும் ஆராய்ந்து சரியான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் ,அண்மைக் காலமாக எதிர்க்கட்சிகள் நீதிமன்ற தீர்ப்புக்கள் குறித்து கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருவதாகவும், இது ஏற்புடையதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.