இந்தியா: தமிழ்நாடு

அதிமுக- பாஜக பிரிவு என்பது அரசியல் நாடகம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், அக்கட்சியின் சிதம்பரம் தொகுதி வேட்பாளருமான திருமாவளவன் தெரிவித்தார். சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அரியலூர் மாவட்டம் தவுத்தாய்குளம், வாலாஜா நகரம், கயர்லாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியது: இந்த மக்களவைத் தேர்தல் வழக்கமாக நடைபெறும் தேர்தல் அல்ல. சங்பரிவார் அமைப்புகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையேயான போர். அதிமுக அணி வேறு, பாஜக அணி வேறு என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். இவர்கள் ஒன்றாக இருந்தபோதே வெற்றி பெற முடியவில்லை. பிரிந்து நின்று வெற்றி பெற முடியாது என்று அவர்களுக்கே தெரியும். அதிமுக- பாஜக பிரிவு என்பது அரசியல் நாடகம்.

இட ஒதுக்கீடுக்கு எதிரானவர் மோடி என்று பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், இன்று பாஜகவுடன் இணைந்துள்ளார். சமூக நீதியை பாதுகாக்கவே திமுகவுடன் விசிக கூட்டணி அமைத்துள்ளது. எந்த நெருக்கடி வந்தாலும் எங்களது கூட்டணி தொடரும். இவ்வாறு அவர் பேசினார். பிரச்சாரத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், எம்எல்ஏ கு.சின்னப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.