இந்தியா: தமிழ்நாடு

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் பேருந்து நிலையம் அருகே பாமகவின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜோதியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில், அன்புமணி பேசியதாவது....

தமிழகத்தின் நலனுக்காக பாமக நிறுவனர் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியுடன் அவருக்கு நெருங்கிய நட்பு உள்ளது. இதன்மூலம், தமிழகத்தின் நலனுக்கான திட்டங்களை நாம் செயல்படுத்த முடியும். அதனால், நாம் வெற்றி பெற்று மோடிக்கு ஆதரவளித்தால், தமிழகத்தில் பெரிய அளவிலான திட்டங்களை நாம் செயல்படுத்த முடியும்.

தமிழக நலனை கருதி மட்டுமே நாம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என முதலில் குரல் கொடுத்தது பாமக நிறுவனர். இதன் பேரிலேயே, பாலாற்றில் தடுப்பணை கட்டப்பட்டது.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு தமிழகத்தில் உள்ளது. பல்வேறு கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு, தகுதி உள்ளவர்கள் தான் அதில் பயன்பெற முடியும் என மக்களை ஏமாற்றும் ஓர் ஆட்சி இது. பாமக வேட்பாளரின் வெற்றியை அடுத்து மீண்டும் தங்களை நன்றி கூட்டத்தில் சந்திக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.